அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை கடைப்பிடிக்குமாறு ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்பு கொள்கையின் முக்கிய அம்சங்களை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, மீண்டும் புதிய வரி உயர்வுகளை ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையிலேயே இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு எட்டப்பட்ட இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையின்படி, பரஸ்பர நம்பிக்கையும் கடப்பாடுகளும் அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
Washington மேற்கொள்ளவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான விளக்கத்தை ஐரோப்பிய ஆணையம் கோரியுள்ளதுடன், இத்தகைய தெளிவற்ற கொள்கைகள் உலக சந்தையை சீர்குலைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
முன்னதாக, ட்ரம்ப்பின் முந்தைய வரி விதிப்பு திட்டங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி அனைத்து இறக்குமதிகள் மீதும் தற்காலிகமாக 10 சதவீத வரியை விதித்த ட்ரம்ப், தற்போது அதனை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
இது கடந்த 2025-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த நிச்சயமற்ற சூழலால், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் வாக்கெடுப்பை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஒப்பந்தம் என்பது மதிக்கப்பட வேண்டிய ஒன்று எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணையம், தனது நலன்களைப் பாதுகாக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.














