மூன்றாம் உலகப் போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்கெனவே தொடங்கி விட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி யுக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியது. இன்றுடன் போர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலின் சுருக்கத்தை, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதன் போது அவர் தெரிவித்துள்ளதாவது : ‘வான் பாதுகாப்பு என்பது இன்று மிகவும் சவாலான பிரச்சினையாக உள்ளது. துரதிருஷ்டவசமாக வான் பாதுகாப்பு அமைப்புகளை நாங்களே தயாரிக்க அனுமதிக்கும் உரிமங்களை எங்கள் நட்பு நாடுகள் எங்களுக்கு வழங்கவில்லை. குறைந்தபட்சம் ஏற்கெனவே உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகளை தயாரிக்க வேண்டும். இதுவரை நாங்கள் அதில் வெற்றி பெறவில்லை.
இந்தப் போரில் உக்ரைனை வலிமையாக்க வேண்டும் என்றால் எங்கள் வான் பரப்பை மூட வேண்டும். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். பொருளாதாரம் செயல்பட வேண்டும். பணப்புழக்கம் இருக்க வேண்டும்இ வரிகள் மூலம் கிடைக்கும் பணம் ராணுவத்துக்குச் செலவிடப்பட வேண்டும். இந்த வழியில்தான் நாங்கள் எங்கள் ராணுவத்தை பலப்படுத்துகிறோம். துரதிருஷ்டவசமாக இது இன்னும் நடக்கவில்லை. ஏவுகணைகளுக்கான உரிமங்களாவது எங்களுக்குத் தேவை.
மூன்றாம் உலகப் போரைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. புடின் அதை ஏற்கெனவே தொடங்கிவிட்டார் என்றே நான் நம்புகிறேன். கேள்வி என்னவென்றால் அவர் எவ்வளவு நிலப்பரப்பை கைப்பற்ற முடியும் என்பதும் அவரை தடுப்பது எப்படி என்பதும் தான். ரஷ்யா வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும். ஏனெனில் ரஷ்யா தனது சொந்த உலகத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தேர்வு செய்வதை மாற்றுகிறது. அதனால்தான் புடின் மூன்றாம் உலகப் போரை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக நான் நம்புகிறேன்.
இது பரந்த முழு அளவிலான மூன்றாம் உலகப் போராக மாறுவதை நாங்கள்தான் தடுத்துக் கொண்டிருக்கிறோம். புடினை தடுக்கும் புறக்காவல் நிலையமாக யுக்ரைன் இன்று உள்ளது.
இன்று ஐரோப்பா எங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அமெரிக்காவிடம் இருந்து Pருசுடு என்ற வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் திட்டத்துக்கு ஐரோப்பா நிதி உதவி அளிக்கிறது. ஆனால் இது போதுமானதா என்றால் நான் மாறுபடுகிறேன்.
ஒரு நாட்டுக்கு கணிசமான நிதியை ஒதுக்குவதால் போதுமான அளவு நிதி உதவியை அளிப்பதாகக் கூறும் நாடுகள் உள்ளன. மிகக் குறைவாக நிதி ஒதுக்கும் நாடுகளும் உள்ளன. உதவியை தடுப்பவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு தீங்கு விளைப்பவர்களைவிட இவர்கள் மேலானவர்கள்.
ஒட்டுமொத்த அளவில் வழங்கப்படும் நிதி உதவி போதுமானதா என்றால் இல்லை என்பதுதான் எனது பதில் ஆனால் ஐரோப்பாவைப் பொறுத்தவரை அது யுக்ரைனுக்கும் யுக்ரைன் மக்களுக்கும் ஆதரவாக இருந்து உதவி வருகிறது. ஆனால் எங்களுக்கு இன்னும் அதிக தேவை உள்ளது. ஏனெனில் ரஷ்யா அளவுக்கு எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. என்று தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்கள் குறித்து நாம் பேசும்போது ஆட்சேர்ப்புக்குப் பதிலாக ஒப்பந்தங்களுக்கு மாறும்போது ஐரோப்பா எங்களுக்கு உதவ முடியும். புதின் இதைத்தான் செய்கிறார். அவர் படையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணம் செலுத்துகிறார். நாங்களும் இதைச் செய்ய விரும்புகிறோம். ஆனால் எங்களிடம் போதுமான அளவு நிதி இல்லை. இதற்கு ஐரோப்பியர்கள் உதவ முடியும். இதற்கு இன்னும் ஐரோப்பியர்கள் இன்னும் நிதி உதவி அளிக்கவில்லை’ என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் நடவடிக்கை எடுத்த நிலையில் அதை தடுக்கும் நோக்கில் அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. 2022-ம் ஆண்டு பிப்.24-ம் திகதி தொடங்கியது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



















