திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெப்ரவரி 27-ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிவிட்டு சிவகார்த்திகேயன், “இயக்குநர் சிபிக்கு நன்றி. தலைவர் ரஜினி பட இயக்குநர் நீங்கள், இவ்வளவு நேரம் இருந்து விழாவை சிறப்பித்தற்கு நன்றி. நாம் இருவரும் தான் சுதனுடன் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. என்னை விட்டுவிட்டு நீ மட்டும் தப்பித்துவிட்டாய்.
நான் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன். நமக்கான ஒப்பந்தம் இருக்கிறது, மீண்டும் வரவேண்டும். சூரி அண்ணனுக்கு நன்றி. 30 ஆண்டுகள் கழித்துக் கூட ராதிகா – ஸ்ரீப்ரியா நட்பு மாதிரி நமது நட்பு இருக்க வேண்டும். இன்று நீங்கள் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறீர்கள்.
சினிமாவில் ஏதேனும் ஒரு ரோலில் நடித்து விட வேண்டும் என்று வந்தவன் நான். அப்படியே ஹீரோ வாய்ப்பு வந்தது. மக்கள் கைதட்டி வெற்றி நாயகன் என்று சொன்னவுடன், நான் நல்லாயிருப்பதை தாண்டி நண்பர்களுக்கு ஏதேனும் பண்ண வேண்டும் என தோன்றியது.
அப்படி நண்பன் அருண்ராஜா காமராஜ்க்காக ஆரம்பிக்கப்பட்டது தான் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ். பெண்கள் மிகவும் வலிமை மிக்கவர்கள் என்பதை சொல்ல வேண்டும் என உருவாக்கப்பட்டது தான் ’கனா’. உலகில் முதன்முதலாக பெண்கள் கிரிக்கெட்டை மையாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது.
அடுத்து யூடியூப் நபர்கள் நிறைய பேர் சினிமாவுக்கு வர விரும்பினார்கள். அவர்களில் ஒருவரான கார்த்திக் வேணுகோபாலை வைத்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தை தயாரித்தேன். அதனைத் தொடர்ந்து ‘வாழ்’, ‘டாக்டர்’, ’டான்’ என படங்கள் பண்ணினோம். ’குரங்கு பெடல்’ என்ற படத்தினை வழங்கினோம்.
அந்தப் படத்தை இப்போதும் நிறைய பள்ளிக்கூடங்களில் திரையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘கொட்டுக்காளி’ படத்தை கமர்ஷியல் விஷயங்களுக்காக பண்ணவில்லை. பி.எஸ்.வினோத்ராஜ் என்ற இயக்குநரை கொண்டாட வேண்டும் என்பதற்காக பண்ண படம் அது. அந்தப் படத்தின் வெற்றியை நிறைவாக உணர்ந்துள்ளேன். இன்னும் அதே மாதிரி நிறைய படங்கள் வரும். அடுத்து ’தாய் கிழவி’ படம்.
’தாய் கிழவி’ கதையைக் கேட்டவுடன், இதை பண்ண வேண்டும் என முடிவு பண்ணினேன். இந்தப் படத்தில் நடித்த அத்தனை பேருமே ஸ்டார்ஸ் தான். அப்போதே 2 படத்துக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டோம். அனைவருமே ‘தாய் கிழவி’ பார்த்துவிட்டு ‘சேயோன்’ வாய்ப்பு கொடுத்துள்ளார் என நினைக்கிறார்கள். அப்படியல்ல, அவரிடம் கதைக் கேட்ட அன்றே அவரது 2-வது படத்தின் ஹீரோ நான் என முடிவு செய்துவிட்டேன்.
’தாய் கிழவி’ இயக்குநர் சிவாவிடம் இருக்கும் நேர்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். கமல் சார் இப்படத்தை பார்த்துவிட்டு, இதில் நிறைய நட்சத்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள் என்று சொன்னார். இதில் உள்ள கதாபாத்திரத்தை ராதிகா மேடத்தை தவிர நடிப்பதற்கு இந்தியாவில் ஆளே இல்லை. இயக்குநர் சிவாவுக்கு இன்னும் நிறைய வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது.
’சேயோன்’ படத்துக்கு அடுத்த படமும் சிவாவுடன் தான் பயணிக்கப் போகிறேன். ஒரு தயாரிப்பாளராக ‘தாய் கிழவி’ எங்களுக்கு லாபகரமான படம் தான். அனைவருமே ஏதேனும் நல்லது செய்துவிட வேண்டும் என்ற கனவோடு தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
எனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து முடிந்த அளவுக்கு நல்லது பண்ணிக் கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த இடத்தைக் கொடுத்த திரையுலகிற்கு ஏதேனும் பண்ணனும் என்று தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.
யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாண்டிப் போகவோ, யாரையும் எதிர்க்கவோ, யாரையும் காலிப் பண்ணவோ நான் வரவில்லை. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதை செய்ய விடுங்கள் என்று தான் கேட்டுக் கொள்கிறேன். இதுவரை ரீமேக் படங்கள் செய்ததில்லை, கதை கேட்டு படங்கள் பண்ணுகிறேன்.
எனது படங்கள் வெற்றி, தோல்விக்கு நான் பொறுப்பு என நம்புகிறேன். மக்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகளை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார். அந்த தடைகளை நீக்கிவிட்டால் இன்னும் நான்கு சிவகுமார் முருகேசனை கூட்டிக் கொண்டு வருவேன்” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.



















