பிரித்தானியாவின் கென்ட் (Kent) மற்றும் சசெக்ஸ் (Sussex) பகுதிகளில் தொடர்ச்சியாக நீர் விநியோகத் தடைகளை ஏற்படுத்தியதற்காக ‘சவுத் ஈஸ்ட் வாட்டர்’ (South East Water) நிறுவனத்திற்கு 22 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோக ஒழுங்குமுறை அமைப்பான ‘Ofwat’, இந்த அதிரடி அபராதத்தை விதித்துள்ளது.
கடந்த 2020 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கென்ட் மற்றும் சசெக்ஸ் பகுதிகளில் நிலவிய நீர் விநியோகத் தடைகளால் 2 இலட்சத்து 86ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டே இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக Ofwat தெரிவித்துள்ளது.
Ofwat நடத்திய விசாரணையில் சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனம் பல முக்கிய விடயங்களில் தவறிழைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, அதிக தேவை நிலவும் காலங்களிலோ அல்லது கடும் காலநிலை மாற்றங்களின் போதோ விநியோகத்தைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை திட்டங்களை நிறுவனம் வகுக்கவில்லை எனவும் நீர்த்தேக்கங்கள் மற்றும் பிரதான குழாய்களைச் சரியாகப் பராமரிக்காததால், வறட்சி அல்லது உறைபனி காலங்களில் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பனிப்புயலின் (Beast from the East) போது ஏற்பட்ட குளறுபடிகளிலிருந்து இந்த நிறுவனம் எவ்விதப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என Ofwat சாடியுள்ளது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் நீர் இன்றி தவித்தது குறித்துத் தற்போது தனியான விசாரணை ஒன்றும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














