உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி சமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.
உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தனது வீரர்கள் ஆலோசனைக் குழுவில் புதியயவர்களை இணைத்துக்கொண்டுள்ளது.
இதற்கு அமைய பெட் கமின்ஸ், ஜேசன் ஹோல்டர், ஹீதர் நைட், ஏய்டன் மார்க்ராம், ஸ்கொட் எட்வேர்ட்ஸ் மற்றும் லாரா வுல்வார்ட் ஆகிய முன்னணி சர்வதேச கிரிக்கெட் வீர, வீராங்கனைகள் அடங்கிய குழுவில் அத்தபத்துவும் இணைந்துள்ளார்.
ஓய்வுபெறும் உறுப்பினர்களான டிம் சௌதி, சொஃபி டிவைன் ஆகியோருக்குப் பதிலாக, புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான ராஷித் கான், வெய்ன் மெட்சன், டெரில் மிட்செல் மற்றும் மெடி கிரீன் ஆகியோருடன் அத்தபத்துவும் இணைந்துள்ளார்.
தனது நியமனம் குறித்து கருத்து வெளியிட்ட அத்தபத்து, உலகளாவிய ஆலோசனைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைவதாகக் கூறினார்.
‘உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, இலங்கைக்கும் ஆசிய கிரிக்கெட் சமூகத்திற்கும் ஒரு பெருமைக்குரிய தருணம்’ என அவர் கூறினார்.
உலகளவில் வீரர்களின் குரலை பலப்படுத்தவும், குறிப்பாக ஆசிய வீரர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாக அத்தபத்து தெரிவித்தார்.
‘உலகெங்கிலும் உள்ள வீரர்களின் குரலை பலப்படுத்த உதவும் வகையில், ஒரு சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக எனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். விளையாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய முடிவுகளில், சகல பிராந்தியங்களிலிருந்தும்இ குறிப்பாக ஆசியாவிலிருந்து வரும் வீரர்களின் குரல் ஒலிக்கப்படுவதும்இ அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதும் முக்கியம்’ என்று அவர் மேலும் கூறினார்.
கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், வீரர்களின் நலனை மேம்படுத்தவும் உலகளாவிய கிரிக்கெட் சூழலுக்கு நேர்மறையாகப் பங்களிக்கவும் சக குழு உறுப்பினர்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற உறுதிபூண்டுள்ளதாக அத்தபத்து மேலும் கூறினார்.
உலக கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கிய காலகட்டத்தில் வீரர்களின் ஒட்டுமொத்த குரலை பலப்படுத்துவதையும், விளையாட்டின் எதிர்காலத்தையும் நீண்டகால வெற்றியையும் வடிவமைக்க வீரர்கள் உதவுவதை உறுதி செய்வதையும் புதிய வீரர்கள் ஆலோசனைக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



















