இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி, கடன் சுமையால் முடங்கும் பட்சத்தில் (Insolvency), அங்கு பயிலும் மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றக் கல்வித் தெரிவுக்குழு (Education Select Committee) தெரிவித்துள்ளது.
கல்வித் தெரிவுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 12 மாதங்களுக்குள் சுமார் 24 கல்வி நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல பல்கலைக்கழகங்கள் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆட்குறைப்பு, பாடப்பிரிவுகளை ரத்து செய்தல் மற்றும் நிலம் அல்லது கட்டிடங்களை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கல்வித் துறை (DfE) செய்தித் தொடர்பாளர், பல்கலைக்கழகங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும், மாணவர்கள் மற்றும் வரி செலுத்துவோரின் நலனை உறுதி செய்வதிலும் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் முக்கியப் பல்கலைக்கழகங்கள் திவாலாவது என்பது இனி வெறும் ஊகம் அல்ல, அது நிஜமாகவே நடக்கக்கூடிய சாத்தியம் என்று ஹெலன் ஹேய்ஸ் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













