அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை விண்ணப்பங்கள் ஜூன் 22 முதல் ஜூலை 16 வரை ஆன்லைன் முறையில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk ஆகியவற்றின் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்கள், தங்களது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை எதிர்கால தேவைகளுக்காக பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போது தரம் 12 இல் கல்வி பயிலும் மற்றும் 2027 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றவுள்ள மாணவர்கள் மட்டுமே இந்த GIT பரீட்சைக்குத் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பாடசாலை மாணவர்களின் அனைத்து தகவல்களும் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னரே பரீட்சைக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் புதிய மாணவர்களை இணைக்க முடியாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற 1911, 011 2784208, 011 2784537, 011 2786616 மற்றும் 011 2784422 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


















