வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமையன்று (28) தீவிரமாக ஈடுபட்டனர்.
காணாமல் போன ஆயிரக்கணக்கானோரின் பட்டியலைக் குறைப்பதற்கான இந்தச் சவாலான தேடுதல் வேட்டையில், அவ்வப்போது உயிருடன் மீட்கப்படும் நபர்கள் மீட்பு பணிகளுக்கு சற்று நிம்மதியை அளித்தன.
நீண்டகாலமாகத் தீவிர அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமான ‘லா குவைரா’விற்கு (La Guaira) வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் குவிந்து வரும் நிலையில், புதன்கிழமை ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது.
தேசிய சட்டமன்றத் தலைவரும் வெனிசுலா இடைக்கால ஜனாதிபதியின் சகோதரருமான ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் ஞாயிற்றுக்கிழமையன்று (28) பலி எண்ணிக்கை 20 அதிகரித்து மொத்தம் 1,450-ஐ எட்டியதாகத் தெரிவித்தார்.
மேலும், 3,150 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12,721 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 774 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 தீவிரத்துடன் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.
இத்தகைய உயிரிழப்பு எண்ணிக்கை ஏற்பட்டால், இவை கடந்த நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்களின் பட்டியலில் இடம்பெறும்.















