கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்ற சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் பலம் வாய்ந்த ஆனால் 20 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட புளூ ஈக்ள்ஸ் கழகத்தை 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகம் வெற்றி கொண்டது

கடந்த வாரம் அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்திடம் அடைந்த தோல்வியை இந்த வெற்றி மூலம் புளூ ஸ்டார் நிவர்த்தி செய்துகொண்டது.
போட்டியின் 14ஆவது நிமிடத்தில் புளூ ஈக்ள்ஸ் கழகத்தின் மத்திய கள மார்க்கி வீரர் ஃபாரிஸ் உமர் அநாவசியமாக இரண்டு தடவைகள் மத்தியஸ்தர் சசன்கவின் மஞ்சள் அட்டைக்கு இலக்காகி சிவப்பு அட்டையுடன் அரங்கை விட்டு வெளியேறினார்.
இதனை சாதகமாக்கிக் கொண்ட புளூ ஸ்டார் கழகம் பல தடவைகள் புளூ ஈக்ள்ஸ் கழகத்தின் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது.
ஆனால, மத்திய கள வீரர்களின் சிறப்பான பந்து பரிமாற்றங்களை முன்கள விரர்கள் முறையாகப் பயன்படுத்த தவறினர்.
எவ்வாறாயினும் போட்டியின் 44ஆவது நிமிடத்தில் புளூ ஈக்ள்ஸ் கழகத்தின் கோல் குறுக்குக் கம்பத்தில் பட்டுவந்த பந்தை ஷெஸ்டனின் அலெக்ஸி கோலினுள் புகுத்தி புளூ ஸ்டார் கழகத்தை 1 – 0 என முன்னிலையில் இட்டார்.
இடைவேளையின்போது புளூ ஸ்டார் 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் 61ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் கழகத்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
அந்த பெனல்டியை அவ்டவ் ப்ரன்கி கோலக்கி புளூ ஸ்டார் கழகத்தை 2 – 0 என முன்னிலையில் இட்டார்.
போட்டியின் 83ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து பரிமாறப்பட்ட பந்தை நோக்கி வேகமாக ஓடிய ஷெஸ்டனின் அலெக்ஸி தனது இரண்டாவது கோலைப்போட புளூ ஸ்டார் கழகத்தின் கோல் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது.அதன் பின்னர் ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்த புளூ ஈக்ள்ஸ் கழகத்தக்கு 87ஆவது நிமிடத்தில் பெனல்டி ஒன்று கிடைத்தது.
ஃபிராஸ் ஸஹீர் உதைத்த பெனல்டியை புளூ ஸ்டார் கோல்காப்பாளர் உயதங்க பெரேரா தடுத்தார். ஆனால் அவரது கைகளில் பட்ட பந்து முன்னோக்கி வந்தபோது விரைவாக செயல்பட்ட ஸஹிர் அதனை கோலினுள் புகுத்தினார்.
அதன் பின்னர் புளூ ஈகிள்ஸ் கழகம் தொடர்ந்து கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போக புளூ ஸ்டார் கழகம் 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.













