இந்த மாத தொடக்கத்தில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியைத் தொடர்ந்து ஸ்பெய்ன் வீரர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாக, ஆர்ஜென்டின வீரர்களான லியாண்ட்ரோ பரேடெஸ், நஹுயல் மோலினா மற்றும் உதவிப் பயிற்சியாளர் ரோபர்டோ அயலா ஆகியோர் மீது தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் ஃபிஃபா (FIFA) ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
மெட்லைஃப் (MetLife) மைதானத்தில் போட்டிக்குப் பிந்தைய கொண்டாட்டங்களின்போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த ஒரு வார கால விசாரணைக்குப் பின்னர், இத்தொடரின் பல போட்டிகளின் போது விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆர்ஜென்டின கால்பந்து சங்கத்திற்கு (AFA) எதிராக ஃபிஃபா நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
விளையாட்டுக்கு ஒவ்வாத வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, ஆர்ஜென்டினாவின் தியாகோ அல்மாடா மற்றும் ஸ்பெய்ன் நடுக்கள ஆட்டக்காரர் காவி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பரேடெஸ், மோலினா மற்றும் அயலா ஆகியோருக்கு எதிராகத் தொடங்கப்பட்டுள்ள நடவடிக்கைகளே மிகவும் தீவிரமானவை.
இவை காவி, ரோட்ரி மற்றும் டானி ஓல்மோ ஆகியோருடன் ஆடுகளத்தில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பானவை.
விசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், பரேடெஸ், மோலினா மற்றும் அயலா ஆகியோர் நீண்ட கால இடைநீக்கத்தை எதிர்கொள்ளக்கூடும்.
ஜூலை 12 அன்று நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், ஃபெரான் டோரஸ் கூடுதல் நேரத்தில் அடித்த கோலால் ஆர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.














