அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பணிகள் இன்று (04) கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டன.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டதுடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜூன் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள், ஓய்வூதிய பிரச்சினைகள், அரச சேவையின் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் தொழில்முறை திறன் மேம்பாடு தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவது ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்புகளாகும்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைகளை ஆராய ஆணைக்குழு அமைக்கப்படுவது நீண்ட காலத்திற்கு பின்னர் இடம்பெறும் நடவடிக்கை எனவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளுக்காக தனியான ஆணைக்குழு அமைக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்தார்.
அரச சேவை நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிப்பதால், அதனை வலுப்படுத்துவதற்கான விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டம் அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், அனைத்து அரச ஊழியர்களின் சம்பள உயர்வும் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இறுதி கட்ட சம்பள உயர்வு 2027 ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இரண்டு மாத காலத்திற்குள் இந்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

















