மத்திய கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் புதன்கிழமை (19) அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அதே தெருவில் ஹோட்டலுக்கு அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனங்கள் விரைந்து வந்து, ஹோட்டலுக்குள் இருந்த ஒன்பது பேரின் உடல்களை மீட்டன.
அதற்குள் ஹோட்டல் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் அடங்குவர் என்று சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் ஆறு பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 60 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர்களில் பலர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனை வட்டாரங்களின்படி, உயிரிழந்தவர்களின் உடல்களில் தீக்காயங்களோ அல்லது கீறல் தழும்புகளோ காணப்படவில்லை.
அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் ஆரம்பகட்டமாகக் கருதுகின்றனர்.
இருப்பினும், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்.
அந்த ஹோட்டலில் தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் இல்லாதது குறித்து இப்போது கேள்விகள் எழுந்துள்ளன.
ஹோட்டலிலோ அல்லது அதன் அருகிலுள்ள கட்டிடங்களிலோ போதுமான தீயணைப்பு வசதிகள் உள்ளனவா என்பது குறித்து காவல்துறை சந்தேகம் கொண்டுள்ளது.
காவல்துறை ஏற்கனவே ஹோட்டலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.















