மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில், கேமரூன் எல்லைக்கு அருகே உள்ள ஒரு சிறிய அளவிலான தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தகவல்களும் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வலர் ஒருவரும் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நகரமான பாபுவாவிலிருந்து சுமார் 50 கி.மீ (31 மைல்) தொலைவிலும், கிழக்கு கேமரூனில் உள்ள கரோவா-புலாயிலிருந்து சில கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஜம்போயே கிராமத்தில் செவ்வாய்க்கிழமையன்று (18) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடிந்து விழுந்த கட்டிடத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டதாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வலரான ஜெர்வைஸ் கனகோரோ புதன்கிழமையன்று (19) அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இடிபாடுகளுக்கு அடியில் பலர் இன்னும் சிக்கியிருப்பதாலும் அல்லது காணாமல் போயிருப்பதாலும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.















