ஒரு மருத்துவர் சொன்ன கதை இது.ஒரு முதியவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவர் அனேகமாக உயிர் பிழைப்பது கடினம் என்பது மருத்துவர்களின் முடிவு.இது அவருக்கு அருகே நின்ற அவருடைய முதிய மனைவிக்கும் சொல்லப்பட்டது.அப்பொழுது மனைவி அந்த மருத்துவரிடம் கேட்டார்,”எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்.எனது கணவரை எனது மாவட்ட ஆஸ்பத்திரிக்கு மாற்றி விடுங்கள்”என்று.மருத்துவர் கேட்டார், ஏன் என்று. “அங்கிருந்து எனது கிராமம் கிட்டவாக இருக்கிறது.இவர் இறந்தால் இவர் உடலை அங்கே கொண்டுபோக செலவு குறைவாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு போவது என்றால் செலவு அதிகமாக இருக்கும்.என்னிடம் அந்த அளவுக்குக் காசு இல்லை”என்று. மருத்துவர் அந்த முதிய தாயின்குடும்ப நிலை தொடர்பாக விசாரித்திருக்கிறார்.”எனக்கு ஒரு பிள்ளைதான்.அவர் காணாமல் ஆக்கப்பட்டு விட்டார்.இப்பொழுது நானும் இவரும்தான் தனிய இருக்கிறோம்.துணைக்கு இரண்டு நாய்கள் உண்டு.இவர் இருக்கும்வரை அவர் படுக்கையிலே கிடந்தாலும்கூட அவரைப் பராமரிப்பதன்மூலம் நான் தனிமையைப் போக்குவேன்.இவரும் இல்லையென்றால் நானும் இரண்டு நாய்களும்தான்” என்று அந்த முதிய தாய் கூறியிருக்கிறார்.
அந்தப் அம்மா அநேகமாக இப்பொழுது போராடிக் கொண்டிருக்கும் அன்னையர் மத்தியில் நிற்பவராகத் தெரியவில்லை.ஏனென்றால் போராட்டங்களுக்காக பொதுவெளிக்கு வந்தால் அங்கே அவருடைய வீட்டில் அவருடைய கணவர் இரண்டு நாய்களோடு தனித்து விடப்பட்டு விடுவார். அவருடைய கணவரைப் பராமரிப்பதற்கு அவர் அங்கே இருக்க வேண்டும்.இது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒரு பிள்ளையின் தாயினுடைய கதை.
இவ்வாறு பிள்ளைகளைப் பறிகொடுத்த அம்மாக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கிறார்கள்.இம்முறை அதனை அவர்கள் ஒரு பெரிய அனைத்துலக மாநாடாக ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்கள்.வெளிநாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வருகிறார்கள்.குறிப்பாக அனைத்துலக பொது அமைப்புகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் வர இருப்பதாக தகவல். உள்ளூர் பேச்சாளர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஒளிப்படங்களை தாங்கிய ஊர்தி ஒன்று ஊர்வலமாகச் சென்று மாநாட்டு மண்டபத்தை அடையும்.பின் மாநாடு ஆரம்பமாகும்.மதிய உணவுக்குப்பின் மாநாடு முடிந்த பின், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுகளை வெளிப்படுத்தும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்த் தேசியப் பரப்பில் உணர்ச்சிகரமான முன்னணிப் போராளிகள் இந்த அம்மாக்கள்தான்.எல்லாப் போராட்டங்களிலும் அவர்கள் காணப்படுவார்கள்.எல்லாப் போராட்டங்களின் போதும் போராட்டத்தை உணர்ச்சிகரமாக,கொந்தளிப்பானதாக மாற்றுவது அவர்களுடைய கண்ணீரும் கதறலும்தான்.ஆனால் கடந்த 17ஆண்டுகளாக அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான அதாவது,நிலை மாறுகால நீதிக்கான தீர்மானத்தின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஒர் அலுவலகம் திறக்கப்பட்டது.ஆங்கிலத்தில் OMP-ஓஎம்பி என்று அழைக்கப்படுகின்ற அந்த அலுவலகம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலுமான கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக அது என்ன செய்தது என்பதனை அவர்கள் அண்மையில் ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.
இம்முறை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை வழமைபோல கொழும்பில் கொண்டாடாமல் யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவது என்று அது தொடர்பான அமைச்சும் ஓஎம்பியும் முடிவெடுத்தன.அந்த அடிப்படையில் கடந்த 25 ஆம் திகதி அதாவது சர்வதேச நாளுக்கு ஐந்து நாட்கள் முன்னதாக அந்த நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.இந்த நிகழ்வு தொடர்பாக அறிவிப்பதற்காக ஊடகவியலாளர் சந்திப்பு அதற்கும் சில நாட்களுக்கு முன் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.அந்தச் சந்திப்பின்போது ஓஎம்பி வெளிப்படுத்திய தகவல்கள் வருமாறு…
“காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில்’எமக்குக் கிடைக்கப்பெற்ற 23,352 விண்ணப்பங்களில், முப்படையினர் மற்றும் இரட்டிப்பான விண்ணப்பங்களைத் தவிர்த்து 16,966விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 9,819 முறைப்பாடுகளுக்குரிய பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.மேலதிக விசாரணைகளுக்காகக் கோரப்பட்ட சுமார் 2,000விண்ணப்பங்கள் எமது தலைமை அலுவலகத்தில் உள்ள தேடுதல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இவற்றில் ஏறத்தாழ 800விண்ணப்பங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கடிதங்கள் மூலம் அனுப்பி விவரங்கள் தேடப்பட்டு வருகின்றன.அதேவேளை,எமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுவரை 31 பேரை நாம் நேரடியாகக் கண்டுபிடித்துள்ளோம்”….
“இடைக்கால நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 7,726 முறைப்பாடுகள் இழப்பீட்டு அலுவலகத்துக்குச் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன்,5,540 விண்ணப்பதாரிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபா கொடுப்பனவானது இழப்பீடு அல்ல, அது காணாமல் போன ஆட்களில் தங்கியிருப்பவர்களுக்கான வாழ்வாதார உதவியாகும். உரிய இழப்பீட்டை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தற்போதைய அரசாங்கமும் நீதி அமைச்சரும் இணைந்து விசேட குழுவொன்றை நியமித்துள்ளனர்.அக்குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பின்னர் இழப்பீடு வழங்கும்முறை குறித்துத் தீர்மானிக்கப்படும்”….”காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. இதற்கான விசாரணைகள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக இந்த வருடம் 375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன்,அரசாங்க நியமனங்களுக்குத் தடை உள்ள நிலையிலும், பிரதமரின் செயலாளரின் விசேட அனுமதியுடன் எமது அலுவலகத்துக்கு 69புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.இதற்கமைவாக தற்போது 47பேர் சேவையில் இணைந்துள்ளதுடன்,எஞ்சியோருக்கான நியமனங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வழங்கப்படவுள்ளன”
ஆனால் அம்மாக்கள் ஓஎம்பியை ஏற்றுக்கொள்ளவில்லை. 25ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடந்த நிகழ்வை அவர்கள் புறக்கணித்தார்கள்; எதிர்த்தார்கள்;ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.போலீசார் பலம் பிரயோகித்து அவர்களை அங்கிருந்து அகற்றினார்கள்.
அம்மாக்கள் ஏன் ஓஎம்பியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு கடந்த எட்டு ஆண்டுகளிலும் பல காரணங்களைக் கூறலாம். எனினும் மிகப்பிந்திய, மிகக் கூர்மையான ஒரு காரணத்தை இங்கே சுட்டிக்காட்டலாம்.ஆளுநர் அலுவலகத்தில் இக்கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஊடகச் சந்திப்பின் போது ஓஎம்பி கூறுகிறது,இதுவரை 31பேர்களை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக.அதாவது அந்த 31பேரும் காணாமல் ஆக்கப்படவில்லை,அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று.அப்படியென்றால் அவர்களுடைய விவரங்களை வெளியில் விடுங்கள் என்று அம்மாக்கள் கேட்கிறார்கள்;குடிமக்கள் சமூகங்கள் கேட்கின்றன;மனித உரிமை ஆர்வலர்கள் கேட்கின்றார்கள்.ஆனால் ஓஎம்பி கூறுகிறது, அவர்கள் அதாவது உயிரோடு இருப்பவர்கள் அந்த விபரங்களை வெளியே சொல்லக்கூடாது என்று தங்களிடம் கேட்டிருப்பதாக.அவர்கள் ஏன் அதை மறைக்கச்சொல்லிக் கேட்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் உயிருடன் இருந்துகொண்டு தாங்கள் காணாமல் ஆக்கப்பட்டு விட்டதாக பொய்யான முறைப்பாட்டை ஓஎம்பிக்குக் செய்திருக்கிறார்கள்.அப்படியென்றால் அது குற்றம்.அந்தக் குற்றச் செயலை செய்தவர்களை விசாரிக்க வேண்டும்.அந்த குற்றத்தை ஏன் மறைக்க வேண்டும்?இது குழந்தைப் பிள்ளைத்தனமான ஒரு காரணமாகத் தோன்றவில்லையா?
இப்படித்தான் இருக்கிறது ஓஎம்பியின் செயற்பாடுகள்.அம்மாக்கள் ஓஎம்பியை ஏற்றுக் கொள்ளவில்லை.ஆனால் அரசாங்கம் ஓஎம்பியின் அனைத்துலக அங்கீகாரத்தை எப்படி மேலும் பலப்படுத்துவது என்று சிந்திக்கின்றது.கடந்த 25 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வும் அதன் பின்னரான நிகழ்வுகளும் அதைத்தான் காட்டுகின்றன.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் ஒரு பகுதியில் தங்களோடு நிற்கிறார்கள், தாங்கள் கொடுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று அரசாங்கம் காட்டப்பாக்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் ஓஎம்பியை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றும் காட்டப்பாக்கிறது. அப்படிக் காட்டினால்தான் ஓஎம்பியின் சர்வதேச அங்கீகாரத்தை மேலும் பலப்படுத்தலாம்.அதைவிட முக்கியமாக,உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை மேலும் பலப்படுத்தலாம்.
செம்மணி அகழ்விலும் அரசாங்கம் அதைத்தான் செய்கின்றது.செம்மணி அகழ்வாராய்ச்சிக்கு அரசாங்கம் நிதியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன்மூலம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை வெளிநாடுகளில் நிரூபிப்பதே அவர்களுடைய நோக்கமாகக் காணப்படுகிறது.
கடந்த 25 ஆம் தேதி யாழ்.மாவட்ட செயலகத்தில் உரை நிகழ்த்திய அமைச்சர் சந்திரசேகரன்,ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதி அனுரகுமரவின் மூத்த சகோதரரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஒருவர்தான்.அனுரவின் தாயார் இப்பொழுதும் மூத்த மகனுக்காகக் காத்திருக்கிறார்.அவருக்காகப் பிரார்த்திக்கிறார்.. என்று அமைச்சர் சொன்னார்.
அது உண்மை.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கண்ணீரின் பெறுமதி அனுரவிற்கு நன்கு தெரியும்.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மத்தியில் இருந்துவந்த ஒரு ஜனாதிபதி அவர்.எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணர்வுகளை அவரைவிட வேறு எந்த ஜனாதிபதியும் புரிந்துகொள்ள முடியாது. அந்த அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை அவரைவிட வேறு எந்த ஜனாதிபதியும் கொடுத்து விடவும் முடியாது.
ஆனால் அது நடக்குமா?அவருடைய அமைச்சரவையில் உள்ள நீதி அமைச்சர் கூறுகிறார்,குற்றவாளிகள் இனம் காணப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று. ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு அனுர “அசோசியேட்டட் நியூஸ் பிரஸ்” ஊடகத்துக்கு வழங்கிய ஒரு செவ்வியல் சொன்னார்,பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றுதான் கேட்கின்றார்களே தவிர, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கேட்கவில்லை என்று.
உண்மையைக் கண்டுபிடிப்பது என்றால் என்ன?குற்றவாளியைக் கண்டுபிடிப்பது.குற்றவாளியை ஏன் கண்டுபிடிக்க வேண்டும்?விசாரித்து தண்டிப்பதற்குத்தானே? ஏன் தண்டிக்க வேண்டும்? குற்றச்செயல்கள் மீண்டும் நிகழ்வதைத்தடுப்பதற்கு.ஆனால் அனுர கூறினார், பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று கேட்கவில்லை என்று.
ஏன் அப்படிக் கூறுகிறார்? அவர் தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து கூறுகிறாரா?இப்பொழுது ஆட்சி செய்யும் தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தின் இதயமாக இருப்பது ஜேவிபி.அதன் தோழர்களும் தோழிகளும் ஆயிரக்கணக்கில் கொடூரமான முறைகளில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு நீதிகேட்டு ஜேவிபி எத்தனை வழக்குகளைத் தொடுத்திருக்கிறது?
காணாமல் ஆக்கப்பட்ட தன் தோழர் தோழியர்களுக்காக ஜேவிபி நிர்ணயகரமான விதங்களில் போராடவில்லை;தொடர்ச்சியாகப் போராடவில்லை;நீதி கிடைக்கும் வரை போராடவில்லை.இப்பொழுது ஆளும் கட்சியாக இருந்து கொண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தன் தோழர் தோழியர்களின் கொடுஞ்சாவுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவில்லை. ஏன் ?
ஏனென்றால்,யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஜேவிபி யுத்த வெற்றியின் பங்காளியாக இருந்தது. யுத்த வெற்றியைக் கொண்டாடியவர்கள் மத்தியிலும் காணப்பட்டது.யுத்த வெற்றியின் நாயகர்களாகக் கொண்டாடப்படும் படைத் தரப்புக்கு இப்பொழுது அனுர முப்படை தளபதியாக இருக்கிறார்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைபெற்றுக் கொடுக்கும் விசாரணைகளைத் தொடங்கினால் குற்றம் சாட்டப்படப் போவதும் விசாரிக்கப்படப் போவதும் அந்தப் படைத்தரப்புத்தான்.யாரை வெற்றி நாயகர்களாக அவர்கள் கொண்டாடுகிறார்களோ,அவர்களையே விசாரிக்கவும் தண்டிக்கவும் வேண்டி வரலாம்.எனவே தமது யுத்தவெற்றி நாயகர்கள் தண்டிக்கப்படுவதை ஜேவிபி விரும்பவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?யுத்த வெற்றியைப் பாதுகாப்பதா?அல்லது தம் தோழர் தோழியர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா? என்ற இரண்டு எதிர்ப் புள்ளிகளில் ஜேவிபியின் தெரிவு என்ன?இதுதான் நிலைமையென்றால்,செம்மணியுமுட்பட புதை குழிகளுக்கும் இதுவரையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்று எந்த அடிப்படையில் நம்புவது?













