கிரீஸின் தலைநகர் ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள தனாக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற “Athens Flying Week 2026” சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, கிரேக்க விமானப்படைக்குச் சொந்தமான F-4E Phantom II போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் விமானம் தாழ்வான உயரத்தில் சாகசப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென உயரத்தை இழந்து தரையில் விழுந்து வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையில் மோதியதைத் தொடர்ந்து பாரிய தீப்பரவல் ஏற்பட்டதுடன், வானில் கரும்புகை சூழ்ந்தது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களுடன் விமானங்களும் ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டன. மீட்புப் பணிகளும் தீப்பரவல் காரணமாக ஆரம்பத்தில் சிரமமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, விமானக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்களிடையே உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும், விபத்தைத் தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சியின் எஞ்சிய அனைத்து விமான சாகசங்களும் இரத்து செய்யப்பட்டன.
விமான விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. காரணத்தை கண்டறிய கிரேக்க விமானப்படையினால் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இரு விமானிகளின் உயிரிழப்பைத் தொடர்ந்து கிரேக்க ஆயுதப்படைகளில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது














