தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்தின் விசா விலக்குத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி பெறமாட்டார்கள்.
அந்த அறிவிப்பின்படி, 2026 செப்டம்பர் 15, அன்று திருத்தப்பட்ட விசா விலக்குத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, 21 நாடுகளின் குடிமக்கள் இந்நாட்டிற்கான விசா இல்லா அனுமதியை இழப்பார்கள் என்று தாய்லாந்து அறிவித்தது.
மெக்சிகோ, மொராக்கோ, கொலம்பியா, இலங்கை மற்றும் ஜமைக்கா உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த, தற்போது 60 நாட்கள் வரை விசா இன்றி தங்கும் வசதியைப் பெற்றுள்ள பயணிகளை இந்த மாற்றம் பாதிக்கிறது.
பாதிக்கப்பட்ட நாட்டுப் பயணிகள் தாய்லாந்தின் இணையவழி இ-விசா (e-Visa) தளம் மூலமாகத் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
இதில் சுற்றுலா விசா மூலம் ஒரு வருகையின்போது 60 நாட்கள் வரை தங்கியிருக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த புதிய திருத்தத்தின்படி தாய்லாந்து, விசா இன்றி நாட்டிற்குள் நுழையத் தகுதியுள்ள நாடுகளின் எண்ணிக்கையை 93-லிருந்து 60-ஆகக் குறைக்கிறது.
இந்த புதிய விதிகள் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 15, செவ்வாய்க்கிழமை அன்று நடைமுறைக்கு வருகின்றன.
இந்தச் சீர்திருத்தமானது, 93 நாடுகளைச் சேர்ந்த சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 60 நாட்கள் வரை விசா இன்றி நுழைய அனுமதித்த, ஜூலை 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக விலக்குத் திட்டத்திற்கு மாற்றாக அமைகிறது.
பாதிக்கப்பட்ட 21 நாடுகள்:
அல்பேனியா, அன்டோரா, கொலம்பியா, கியூபா, டொமினிகா, டொமினிகன் குடியரசு, எக்குவாடோர், குவாத்தமாலா, ஜமைக்கா, கொசோவோ, மெக்சிகோ, மொனாக்கோ, மொராக்கோ, பனாமா, பப்புவா நியூ கினியா, சான் மரினோ, இலங்கை, டோங்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, உருகுவே மற்றும் உஸ்பெகிஸ்தான்.














