ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் பிற நாடுகள் மீது 100 சதவீத இறக்குமதி வரிகளை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் அதே வேளையில், ஈரான் மீதான தற்போதைய தடைகளை நீட்டிக்கும் சட்டமூலம் ஒன்றை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.
இரண்டு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து வாக்களித்ததைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் விதிக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டம், செவ்வாய்க்கிழமை மாலை பிரதிநிதிகள் சபையில் ஒரு நடைமுறைத் தடையைக் கடந்தது.
இந்த சட்டமூலம் புதன்கிழமை (16) அன்று பிரதிநிதிகள் சபையில் இறுதி வாக்கெடுப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா மீதான தடைகள் சட்டமூலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான தீர்மானம், வேறு பல சட்ட முன்வரைவுகளுடன் சேர்த்து, 214-க்கு 211 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.
சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பங்காகளிகள் மீது 100 சதவீத இறக்குமதி வரிகளை விதிக்க ட்ரம்ப்புக்கு அதிகாரம் அளிக்கவும் இந்த சட்டமூலம் முயல்கிறது.
ஆகஸ்ட் 7 அன்று செனட் சபையால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் வடிவம், ரஷ்யாவின் வர்த்தகக் கூட்டாளிகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.
மாறாக, அளவு அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் மிகப்பெரிய ஐந்து நாடுகளையே அது குறிப்பிடுகிறது.
உக்ரேன் ஆதரவுக் குழுக்கள் வொஷிங்டனில் தங்கள் செல்வாக்கு முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நேரத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கீவ்விற்குத் தொடர்ச்சியான ஆதரவளிக்குமாறு அமெரிக்கச் சட்டமியற்றுபவர்களை வலியுறுத்துவதற்காக, உக்ரேனுக்கான அமெரிக்கக் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட உக்ரரேன் நடவடிக்கை உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுவதற்கு முன்னதாக, இந்த சட்டமூலம் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
வியாழக்கிழமையன்று சபை தனது முன்கூட்டிய இடைவேளையைத் தொடங்கவுள்ளதுடன், இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னர் நவம்பர் 9-ஆம் திகதி மீண்டும் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.















