ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தது 177 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில், அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஈரான் மீதான சுதந்திரமான சர்வதேச உண்மை கண்டறியும் குழுவின் புதிய அறிக்கை ஒன்றின்படி, மினாபில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை மற்றும் லமெர்டில் உள்ள ஒரு விளையாட்டு வளாகத்தின் மீது பெப்ரவரியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள், பொதுமக்கள் உயிரிழப்புகளையும் பொது உள்கட்டமைப்புகளுக்கு சேதத்தையும் ஏற்படுத்திய பாகுபாடற்ற தாக்குதல்களாகும்.
லாமெர்ட் (Lamerd) மீது தாக்குதல் நடத்தியதை அமெரிக்கா முன்னதாக மறுத்திருந்ததுடன், மினாபில் (Minab) என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியிருந்தது.
அந்த அறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்கா நம்பகத்தன்மை அளிக்கவில்லை என்று வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் அரசாங்கத்திற்கு எதிரான பெருந்திரள் போராட்டங்களை ஒடுக்கியபோது, ஈரானிய அதிகாரிகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததையும் நிபுணர்கள் கண்டறிந்தனர்.
31 மாகாணங்களிலும் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட கொலைகள் “மிகப்பெரிய மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலானவை” என்று அவர்கள் கூறினர்.
இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து ஈரான் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
இருப்பினும், மனித உரிமைகள் முறையாகவும் திட்டமிட்ட வகையிலும் மீறப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அது முன்னரே நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

















