தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2017.09.01 திகதியிட்ட 2034/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ், HDPE, LDPE மற்றும் Polypropylene உள்ளிட்ட பொலித்தீன் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொதியிடும் தாள்களை (Lunch Sheets) உள்நாட்டு பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விற்பனைக்காக முன்வைத்தல், காட்சிப்படுத்துதல், இலவசமாக வழங்குதல் அல்லது பயன்படுத்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 10(1)(a) இன் கீழ் வெளியிடப்பட்ட 2019.11.29 திகதியிட்ட 2151/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் உள்ள கட்டளை இலக்கம் 70, Lunch Sheets உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான விசேட லேபிள் தேவைகளை நிர்ணயிக்கிறது. இக்கட்டளை 2020.06.01 முதல் நடைமுறையில் உள்ளது. அதன்படி ஒவ்வொரு Lunch Sheet பொதியிலும் அல்லது கட்டிலும் மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட லேபிளில் வர்த்தகப் பெயர், அதிகபட்ச சில்லறை விலை (MRP), உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, உற்பத்தித் திகதி மற்றும் பயன்பாட்டுக் காலம், பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், அவை உணவுடன் பயன்படுத்துவதற்கு ஏற்றவை மற்றும் உயிரியல் முறையில் சிதையக்கூடியவை/கொம்போஸ்ட் செய்யக்கூடியவை என்ற அறிவிப்பு, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பதிவு இலக்கம், ஒவ்வொரு தாளின் அளவு மற்றும் பொதி/கட்டில் உள்ள தாள்களின் எண்ணிக்கை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.
உற்பத்தியாளர்களுக்கு செய்தி: Lunch Sheets தயாரிக்கும்போது மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கீழுள்ள சுற்றாடல் தடைகள் மற்றும் தேவைகளையும், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் கட்டளை இலக்கம் 70 இன் கீழ் விதிக்கப்பட்டுள்ள லேபிள் தேவைகளையும் முழுமையாகப் பின்பற்றுங்கள். தடைசெய்யப்பட்ட பொலித்தீன் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி Lunch Sheets தயாரிப்பதைத் தவிர்த்து, தயாரிப்புகளை சந்தைக்கு விடுவதற்கு முன்னர் அனைத்து சட்டத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளல் அவசியம்.
வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு செய்தி: Lunch Sheets கொள்வனவு செய்வதற்கு அல்லது விற்பனைக்கு வைப்பதற்கு முன்னர் அவற்றின் மூலம் மற்றும் கட்டாய லேபிள் தகவல்களைச் சரிபார்க்கவும். சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத அல்லது தடைசெய்யப்பட்ட பொலித்தீனைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Lunch Sheets-ஐ விற்பனை செய்யவோ, விநியோகிக்கவோ அல்லது நுகர்வோருக்கு வழங்கவோ வேண்டாம். கொள்வனவு மற்றும் விநியோகம் தொடர்பான பற்றுச்சீட்டுகள் மற்றும் invoices-ஐ முறையாகப் பேணுவதும் முக்கியமாகும் என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.














