ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் முக்கிய உறுப்பினரான ‘கைவாரு முது’ என அழைக்கப்படும் மனோஜ் முத்துகுமாரன என்பவரை எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் அருண இந்திரஜித் இன்று (7) உத்தரவிட்டுள்ளார்.
துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குறித்த சந்தேகநபர், நேற்று (6) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், சந்தேகநபரை இன்றைய தினம் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கொலைகளைச் செய்தல், திட்டமிடுதல் மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை போன்ற தீவிர குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் தொடர்பிலும் இவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.அத்துடன், நவகமுவ பொலிஸாரினாலும் இவருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















