கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பத்திலிருந்து உடலைப் பாதுகாத்து, சௌகரியமாக வைத்திருக்க சரியான ஆடைகளைத் தெரிவு செய்வது அவசியமாகும்.
காற்றோட்டத்தைத் தடுக்கும் ஆடைகளை அணிவதால் வியர்வை ஆவியாவது தடைப்பட்டு, உடலில் அசௌகரியம் அதிகரிக்கக்கூடும். இதற்கு மாறாக, காற்றோட்டமான துணிகள் உடலில் வெப்பம் தேங்குவதைக் குறைத்து, சௌகரியத்தைப் பேண உதவுகின்றன.
குறிப்பாக, பருத்தி, லினன் மற்றும் ரேயான் போன்ற இலகுவான துணி வகைகள் கோடை காலத்திற்கு ஏற்றவையாகக் கருதப்படுகின்றன. இவை காற்றோட்டத்திற்கு வழிவகுப்பதுடன், அன்றாடப் பயன்பாட்டிற்கும் பொருத்தமானவை.
எனினும், துணிகளைத் தெரிவு செய்யும்போது அவற்றின் தன்மைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். லினன் துணிகள் இலகுவானவையாக இருந்தாலும், எளிதில் சுருங்கக்கூடியவை. பருத்தித் துணிகள் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தெரிவாக அமைகின்றன.
அதேவேளை, வெள்ளை, வெளிர் நீலம் மற்றும் பாஸ்டல் நிறங்களிலான ஆடைகள் குறைந்தளவு வெப்பத்தை உறிஞ்சுவதால், வெப்பமான காலநிலைக்கு ஏற்றவையாக உள்ளன. மேலும், இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிவது காற்றோட்டத்தை மேம்படுத்த உதவும்.
எதிர்காலத்தில் நீடித்த பயன்பாட்டைக் கொண்டதும், காற்றோட்டமானதுமான துணி வகைகளுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரிக்கும் என ஜவுளித்துறை வல்லுநர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

















