அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படாததால், இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைய வாய்ப்பில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதி தொடர்பில் தமது சங்கம் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதிக்கு ஏன் சலுகைகள் வழங்கப்படவில்லை எனத் தங்களது சங்கம், நிதி அமைச்சிடம் வினவியதாகவும், அதற்குப் பதிலளித்த அமைச்சு, தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டின் டொலர் கையிருப்பு நிலைமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விளக்கமளித்ததாகவும் அவர் கூறினார்.
தற்போதைய நெருக்கடியான சூழலில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதே பெரிய விடயம் எனவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பான வரி கொள்கைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் மேலதிக கட்டணங்கள் (Surcharges) தொடர்ந்தும் மாற்றமின்றி அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வாகனங்களைக் கொள்வனவு செய்வதை பலரும் ஒத்திவைத்திருந்தனர்.
ஆனால், எவ்வித வரிச் சலுகைகளும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையில் வாகனங்களின் விலைகளில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
















