இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் இரவு (20) வருகை தந்த தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான மேதகு சிஹாசக் புவாங்கெட்கியோ (H.E. Mr. Sihasak Phuangketkeow) அவர்களை, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
தாய்லாந்து பிரதிப் பிரதமர், நவம்பர் 20 முதல் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் (His Majesty King Maha Vajiralongkorn) அரச பிரதிநிதியாக வருகை தந்துள்ள அவர், இன்றைய தினம் (21) கண்டி அஸ்கிரிய மகா விகாரையில் நடைபெறவுள்ள அரச கதின வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, தாய்லாந்து பிரதிப் பிரதமர் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை எளிதாக்குவதற்கும், மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஏதுவாக, சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வீசா விலக்கு அளிப்பது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படவுள்ளமை இவ்விஜயத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான நீண்டகால வரலாற்று, கலாசார மற்றும் பௌத்த பிணைப்புகளை இவ்விஜயம் மேலும் பிரதிபலிப்பதோடு, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் திறந்து வைக்கிறது
















