பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படுமென வேளாண் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் கூறியுள்ளதாவது, “பயணக் கட்டுப்பாடு காரணமாக வருவாயை இழந்த அனைவருக்கும் அரசு உதவி கிடைக்கும்.
அத்துடன் யாரும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட மாட்டார்கள். குறித்த செயற்றிட்டத்தில் 28 மில்லியன் குடும்பங்கள், சலுகைகளைப் பெறுவார்கள்.
இதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி, மத்திய மாகாணத்தில் மொத்த விற்பனை நிலையங்களை மட்டும் திறந்து, அங்கிருந்து கிராமங்களுக்கு லொறிகளின் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய உர பிரச்சினைக்கு தீர்வாக, கரிம உரங்கள் எதிர்காலத்தில் இறக்குமதி செய்வது தொடர்பிலும் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.














