மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், அதன் பணிப்பாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டு, சம்பவத்தில் உயிரிழந்த சம்பத் புஸ்பகுமார என்ற கைதியின் மனைவி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்தக் கைதிகளின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்ட வெலிசர நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி உத்தரவு பிறப்பித்ததாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தவறியுள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆகவே குறித்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவியால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.















