ஜூன் 4 ஆம் திகதி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பதினொரு பேர் உயிரிழந்தது மற்றும் பலர் காயமடைந்தது தொடர்பாக தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) நிர்வாகிகள் மேல் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
KSCA தலைவர் ரகு ராம் பட், செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் இ.எஸ். ஜெயராம் ஆகியோர் இணைந்து இன்று (06) கர்நாடக மேல் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.
கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தைக் காரணம் காட்டி, மனுதாரர்கள் வழக்கை இரத்து செய்யுமாறும், அவசர விசாரணை நடத்துமாறும் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு இன்று பிற்பகல் நீதிபதி கிருஷ்ண குமார் தலைமையிலான ஒற்றை நீதிபதி கொண்ட குழுவால் விசாரிக்கப்பட உள்ளது.
ஜூன் 4 புதன்கிழமை மாலை, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றதைக் கொண்டாட KSCA ஏற்பாடு செய்திருந்த பொது நிகழ்வில் பங்கேற்க மைதானத்திற்கு வெளியே ஏராளமான மக்கள் கூடியிருந்தபோது நெரிசல் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

















