ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற பரபரப்பான பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னரை வீழ்த்தி கார்லோஸ் அல்கராஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
இரண்டு செட்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து, இதுவரை யாரும் சாதிக்காத ஒரு சாதனையை அல்கராஸ் இந்த ஆட்டத்தில் படைத்தார்.
அவர் ஐந்து செட்கள் கொண்ட ஒரு அற்புதமான வெற்றியை 4–6, 6–7 (4), 6-4, 7–6 (3), 7–6 (10-2) என்ற கணக்கில் பெற்றார்.
ஐந்து மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டி, 2012 ஆம் ஆண்டு நோவக் ஜோகோவிச்சுக்கும் ரஃபேல் நடாலுக்கும் இடையிலான அவுஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு இரண்டாவது மிக நீண்ட ஆண்கள் முக்கிய இறுதிப் போட்டியாகும் என்று ESPN தெரிவித்துள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க வெற்றி 22 வயதான ஸ்பெய்ன் வீரருக்கு, அவரது ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வழங்குகிறது.
22 வயது 34 நாட்களில், ஓபன் சகாப்தத்தில் ஐந்து முக்கிய பட்டங்களை வென்ற மூன்றாவது இளைய வீரர் இவர்.

சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான இறுதிப் போட்டியில் 21 வயதான கோகோ காஃப், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அரினா சபலென்காவை 6-7 (5), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தனது முதல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றி 21 வயதான அமெரிக்க வீராங்கனையின் இரண்டாவது பெரிய சாம்பியன்ஷிப்பைக் குறிக்கிறது.
அவர் முன்பு 2023 அமெரிக்க ஓபனை வென்றார்.
அங்கு அவர் இறுதிப் போட்டியில் சபாலென்காவையும் தோற்கடித்தார்.
ESPN தகவலின் படி, ஓபன் சகாப்தத்தில் (அதாவது, 1968 முதல்) 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பல ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஐந்தாவது அமெரிக்கப் பெண்ணாக செரீனா வில்லியம்ஸ் (6), கிறிஸ் எவர்ட் (6), வீனஸ் வில்லியம்ஸ் (4) மற்றும் டிரேசி ஆஸ்டின் (2) ஆகியோருடன் காஃப் இணைகிறார்.
அதேநேரம், 2015 ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸுக்குப் பின்னர் பிரெஞ்சு ஓபனை வென்ற முதல் அமெரிக்க பெண்மணியும் காஃப் ஆவார்.


















