வட மாகாணத்தில் இடம்பெற்று வரும் சில சட்ட விரோத மணல் கடத்தல் சம்பவங்களில் பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர்இ வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், ஒப்பந்தகாரர்கள் சங்க நிர்வாகத்தினர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ” அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் அரசாங்க திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கே மணலை அதிக விலையில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இருப்பது தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் ஆராய்ந்து கொண்டிருக்காமல் முடிவு எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு அமைவாக, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் சில ஆற்றுப்படுக்கைகள், குளங்களிலிருந்து மணலை கழுவி எடுத்துப் பயன்படுத்த முடியும் என்பதுடன் அதற்கான இடங்களை விரைவாக அடையாளப்படுத்துமாறும், உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பில் ‘யாட்’ அமைத்து அங்கிருந்து நியாய விலையில் விநியோகம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பொறிமுறையை உடனடியாக ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடுக் குளத்தில் ஏற்கனவே கழுவி எடுக்கப்பட்ட மணல் கரைச்சிப் பிரதேச சபை ஊடாக விநியோகிக்கப்படவுள்ளமை தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வில் ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுத்தப்படுவதாகவும் இதன் காரணமாக சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் மாவட்டச் செயலர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.















