மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் 03 ஆவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை இன்று (16) எதிர்கொள்கிறது.
அதன்படி, இந்தப் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பல்லேகலயில் நடைபெற்ற இரண்டாவது டி:20 போட்டியில் பங்களாதேஷ் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்தப் போட்டியில் 178 என்ற இலக்கை துரத்திய இலங்கை அணியை, பங்களாதேஷ் வெறும் 94 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தது.
இது பங்களாதேஷுக்கு எதிரான ஒரு டி:20 போட்டியில் இலங்கை அணி பெற்றிக் கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகவும், சொந்த மண்ணில் இலங்கை பதிவு செய்த மிகக் குறைந்த டி:20 ஓட்ட எண்ணிக்கையாகவும் அமைந்தது.
முன்னதாக காலியில் நடந்த டி:20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 150 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்தி தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.
இந்தப் போட்டியில் இலங்கை அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பத்தும் நிஸ்ஸங்கவும் குசால் மெண்டிஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியிலும் அவர்கள் நல்லதொரு ஆரம்பத்தை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷை பொறுத்தவரை, கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளனர்.
புதிய தலைவர் லிட்டன் தாஸின் தலைமையில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி தொடக்க ஆட்டத்தில் சோர்வாகத் தெரிந்தது.
ஆனால், இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டது.
அணித் தலைவர் முன்னணியில் இருந்து வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த சுற்றுப்பயணத்தில் லிட்டன் தாஸ் அணியிடமிருந்து ஒரு இறுதி உந்துதலை எதிர்பார்க்கிறார்.
ஒட்டுமொத்தமாக இரு அணிகளுக்கும் கிண்ணத்தை வெற்றிக் கொள்வதற்கான தீர்க்கமானதொரு போட்டியாக இது அமைவாதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.














