தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த ஜூலை 27ஆம் திகதி நெல்லை பாளையங்கோட்டையில் அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இது குறித்து நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், சமூக வலைதளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
குறித்த பதிவில் “பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆணவப் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் கடுமையான தண்டனை பெற வேண்டும். கவினின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாதிய வன்முறைகள் சமூக இழிவுகளாகும். அதனை எதிர்த்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பது உணரப்பட வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
இதேவேளைபொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்த சுர்ஜித், தனது அக்காவை கவின்குமார் காதலித்தமைக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், அவர் மறுத்ததால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
விசாரணையில், சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் பணியாற்றுபவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இக் கொலைக்கு எதிராக கவின்குமாரின் உறவினர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதோடு பெண்ணின் பெற்றோர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














