ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த விஜயத்தின் போது, ஜனாதிபதி முதலில் மயிலிட்டி துறைமுகத்திற்குச் செல்வார் எனவும் ,அங்கு 70 மில்லியன் ரூபாய் செலவில் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வடக்கு மாகாண மக்களுக்கு ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுடன் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அதனைத் தொடர்ந்து மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டு மைதான அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் சில முக்கிய கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழியை ஜனாதிபதி பார்வையிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுவரை எந்தத் தகவலும் இது தொடர்பாக வெளியாகவில்லை.
யாழ் விஜயத்தை நிறைவு செய்த பின், ஜனாதிபதி நாளை முல்லைத்தீவிற்குச் சென்று வட்டுவாகல் பால புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















