சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது செவ்வாய்க்கிழமை (02) அவுன்ஸ் ஒன்றுக்கு 3,500 அமெரிக்க டொலர்களை விஞ்சி சாதனை அளவை எட்டியது.
பலவீனமான டொலர் மதிப்பு மற்றும் செப்டம்பரில் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரிப்பு என்பவற்றின் பின்னணியில் இந்த விலையேற்றம் வந்துள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை ஆரம்ப வர்த்தகத்தில் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 சதவீதம் உயர்ந்து 3,487.55 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
பின்னரான வர்த்தகத்தில் அதன் விலை அதிகபட்சமாக 3,508.50 அமெரிக்க டொலர்களை எட்டியது.
அதேநேரம், இந்த ஆண்டு இதுவரை வெள்ளியின் விலையானது 32 சதவீதம் உயர்ந்துள்ளது.
புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்கு எதிராக நம்பகமான பாதுகாப்பாக நீண்ட காலமாகக் கருதப்பட்ட தங்கம், 2025 ஆம் ஆண்டில் பல சாதனை உச்சங்களைத் தொட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஸ்பாட் தங்கத்தின் விலை 27 சதவீதம் உயர்ந்தது.
மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் முறையாக அவுன்ஸ் ஒன்றுக்கு US$3,000 அளவை முறியடித்தது.
அதேநேரம், ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு US$40.64 ஆக சிறிதளவு மாற்றமடைந்தது.
பிளாட்டினம் 1 சதவீதம் உயர்ந்து US$1,412.95 ஆகவும், பல்லேடியம் 0.7 சதவீதம் குறைந்து US$1,129.52 ஆகவும் இருந்தது.
இலங்கை நிலவரம்
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (02) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 282,000 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 260,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.














