சகலதுறை வீரர் அஸ்மத்துல்லா ஒமர்சாயின் சாதனை படைத்த டி20 அரைசதத்துடன், நேற்று (09) மாலை நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஹெங்கொங்கை 94 ஓட்டங்களினால் வீழ்த்தி தொடரை நம்பிக்கையுடன் ஆரம்பித்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் வேகமான டி20 அரைசதத்தை பதிவு செய்வதற்காக ஒமர்சாயி 20 பந்துகளை எடுத்துக் கொண்டார்.
அவரது மொத்தமான 53 ஓட்டங்களில் 5 சிக்ஸர்களும், 02 பவுண்டரிகளும் அடங்கும்.
மேலும் தொடக்க வீரர் செடிகுல்லா அடல் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை எடுத்தார்.
இது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 188 ஆக அதிகரிக்க உதவியது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அனுபவமற்ற ஹெங்கொங் அணி, ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கடுமையாகப் போராடியது.
பாபர் ஹயாத் (39) மற்றும் அணித் தலைவர் யாசிம் முர்தாசா (16) ஆகிய இரு வீரர்கள் மாத்திரம் இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர்.
இறுதியில் இலக்கினை எட்ட முடியாது திண்டாடிய ஹெங்கொங் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஒமர்சாயி தெரிவானார்.


















