நாட்டில் உள்ள காணிகளை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு காணி அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக்க கணேபோல மற்றும் ஆதித்ய படபெதிகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாட்டில் காணி முகாமைத்துவதற்கான தேசிய திட்டம் இல்லாமை காரணமாக பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சுற்றுச்சூழல் நீதி மையத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த மனுவில் காணி அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.














