சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அதுல குமார ராஹுபத்தவை ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.
2016 – 2017 காலகட்டத்தில் அவரது அமைச்சின் கீழ் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் புலனாய்வு பிரிவால் இவர் நேற்று (17) கைது செய்யப்பட்டார்.
அதன்படி, சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட 77 திட்டங்களில் 15 திட்டங்களுக்கு பணம் செலவிடப்பட்டிருந்தாலும், தொடர்புடைய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அரசாங்கத்திற்கு 70 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தும் வகையில் நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.















