தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி மற்றும் குஷ்பு ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு இன்று (17) வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இந்த மிரட்டல் மின்னஞ்சல் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலில், நடிகர்களான அஜித் குமார், அரவிந்த் சுவாமி மற்றும் குஷ்பு ஆகியோரின் இல்லத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், தமிழ் முதல்வர் மற்றும் நடிகர்களின் வெளிப்புற வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மிரட்டல் மின்னஞ்சலைப் பெற்ற பின்னர், பொலிஸார் அதிரடியாக செயல்பட்டு, மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் முழுமையாக சோதனை செய்தனர்.
எனினும், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
கடந்த மாதமும் ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இருப்பினும், விரிவான சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை.
ஒக்டோபர் 3 ஆம் திகதி பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகம் மற்றும் நடிகை த்ரிஷாவின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இதற்கிடையில், ஒக்டோபர் 3 ஆம் திகதி, சென்னை விமான நிலைய முகாமையாளர் அலுவலகத்திற்கும் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்த மர்மமான மின்னஞ்சல் வந்தது.
அந்த மின்னஞ்சலின்படி, விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளுக்குள் சக்திவாய்ந்த குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவை வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், பின்னர் அது ஒரு புரளியாகவும் மாறியமையும் குறிப்பிடத்தக்கது.



















