அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு ஐ.சி.டி (ICT) ரத்னதீப ஹோட்டலில் நேற்று (04) நடைபெற்ற, NASSCOM நிர்வாகக் குழு மற்றும் SLASSCOM தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைக் கூறினார்.
டிஜிட்டல்-பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) எதிர்காலப் பாதை குறித்துக் கலந்துரையாடுவதற்காக 3,000இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் உயர் தொழில்நுட்பத் துறைசார் நிறுவனமான NASSCOM மற்றும் 350 இற்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களைக் கொண்ட IT மற்றும் BPM துறைக்கான இலங்கை தேசியச் சபையாகிய SLASSCOM சங்கம் ஆகியன இந்த நிகழ்வில் இணைந்துகொண்டன.
நாட்டின் அண்மையகால சவால்களுக்கு மத்தியிலும் இலங்கைக்குத் தமது வருடாந்த விஜயத்தை மேற்கொண்ட NASSCOM பிரதிநிதிகள் குழுவைப் பாராட்டிய பிரதமர், அவர்களது வருகை இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கும் மீள்கட்டுமானத்திற்கும் பலம் சேர்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம், அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை வலுப்படுத்துதல், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய மறுசீரமைப்புப் பணிகளை வழிநடத்த அரசாங்கம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து குறுகிய கால மற்றும் நீண்ட கால மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் இதன்போது விளக்கமளித்தார்.
கலந்துரையாடலின்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், இலங்கையின் பொருளாதாரத் திட்டம் உறுதியாகப் பேணப்படுவதை வலியுறுத்தினார்.
மத்திய கால மற்றும் நீண்ட கால இலக்காக 7% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் இலக்காகக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அத்தோடு, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்தல் ஆகிய முக்கிய துறைகளுக்கு வருகை தந்திருக்கும் தொழில்நுட்பப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் எடுத்துரைத்தார்.
“வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். இந்தத் துறைகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தி வரும் செயல்திட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், கல்வி அமைச்சினால் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை தொடர்பான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை நடைமுறைப்படுத்துவது ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏனைய அமைச்சுகளும் தமது டிஜிட்டல் மயமாக்கல் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் தமது முறைமைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
அனர்த்த நிலைமைகளைக் கண்டறிதல், வரைபடமாக்கல் மற்றும் புவியியல் தரவுகளைப் பெற்றுக் கொள்ள ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்மொழிவை பிரதமர் ஏற்றுக்கொண்டார். அத்தோடு, ஆவணப்படுத்தல் மற்றும் காலத்திற்கேற்ற கண்காணிப்பு உட்பட இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதிநிதிகள் முன்வந்தனர்.
தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் காரணமாக இந்த ஆண்டு மழையின் சரியான முன்னறிவிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் வரையறுக்கப்பட்டிருந்தது என்றும், இதனால் எதிர்கால அனர்த்த நிலைமைகளைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கு இலங்கையின் முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகளை வலுப்படுத்துவதிலும் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை விளக்கிய பிரதமர், IT மற்றும் BPM முதலீடுகளுக்கு இலங்கையை ஒரு முன்னணித் தளமாக மாற்றுவது தொடர்பான ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு, மறுசீரமைப்புகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான முன்முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்தார்.
மனித வளத்தை மேம்படுத்துதல், கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் தேசியத் திட்டம் மூலம் 2030ஆம் ஆண்டளவில் IT மற்றும் BPM துறையின் ஏற்றுமதி மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு இலங்கை இலக்கு வைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அரச துறையை டிஜிட்டல் மயமாக்குதல், டிஜிட்டல் அடையாள அட்டை முறைமையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேசியக் கல்வி முகாமைத்துவ முறைமை போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்துவதையும், முன்னணி இந்திய மற்றும் உலகளாவிய தொழில்நுட்பத் தொழில்களுக்கான மூலோபாய விரிவாக்கச் சந்தையாக இலங்கையை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட NASSCOM மற்றும் SLASSCOM இடையேயான நீண்டகால ஒத்துழைப்பு முயற்சியாகும். அத்துடன் 2026ஆம் ஆண்டில் NASSCOM தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ மன்றம் (Technology and Leadership Forum) SLASSCOMஇன் அனுசரணையுடன் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கு இணையாக இது அமைந்தது.
இந்த நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜா மற்றும் SLASSCOM, NASSCOM ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.












