அகமதாபாத்தில் உள்ள பல முக்கிய பாடசாலைகளுக்கு இன்று (16) காலை பல வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததாக இந்தியப் பொலிஸார் தெரிவித்தனர்.
வேஜல்பூரின் ஜீவராஜ் பூங்கா பகுதியில் அமைந்துள்ள சைடஸ் பாடசாலை, ஜெபர் பாடசாலை, மகாராஜா அக்ரசென் பாடசாலை, வஸ்த்ரபூரில் உள்ள நிர்மான் பாடசாலை மற்றும் மகர்பாவில் உள்ள டிஏவி சர்வதேச பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலமாக இந்த மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த பாடசாலை வளாகங்களில் முழுமையான பாதுகாப்பு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றல் படை, சிறப்பு செயல்பாட்டுக் குழு, தீயணைப்பு படை மற்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மோப்ப நாய் படைகளைப் பயன்படுத்தி விரிவான சோதனைகளை மேற்கொண்டனர்.
எவ்வாறெனினும், இதுவரை சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்த அதிகாரிகள், இந்த அச்சுறுத்தல்கள் போலியானவை என்றும் உறுதிபடுத்தினர்.
அதேநேரம், மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்ட மூலத்தை கண்டறிந்த அதிகாரிகள் அது குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.














