கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனின் வெஸ்ட் எண்ட் (West End) பகுதியில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி ஒருவரைக் கொலை செய்தும் ஏனைய பலரையும் காயப்படுத்திய நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
2024 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில் 25 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நால்வர் பலத்த காயமடைந்தும் இருந்தனர்.
இதையடுத்து மெட்ரோபொலிட்டன் பொலிஸாரின் விசாரணையைத் தொடர்ந்து, குறித்த வாகனத்தை செலுத்திய 31 வயதான அந்தோணி கில்ஹீனி என்ற நபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.
அந்தோணி கில்ஹீனி வேண்டுமென்றே தனது வாகனத்தைப் பயன்படுத்தி ஒரு பயங்கரமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தி, பெரும் அழிவை ஏற்படுத்தினார் என்று கிரவுன் பிராசிகியூஷன் சேவையைச் (Crown Prosecution Service) சேர்ந்த அதிகாரிகளின் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், மத்திய குற்றவியல் நீதிமன்றமான ஓல்ட் பெய்லியில் நடந்த விசாரணைக்குப் பின்னர் அந்தோணி கில்ஹீனி மீது ஒரு கொலைக் குற்றச்சாட்டு, கொலை முயற்சி செய்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்தமை தொடர்பான ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
அவருக்கான தண்டனை விபரம் 2026 ஜனவரி 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று லண்டன் பெருநகர பொலிஸார் கூறியுள்ளனர்.














