இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள 2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, அவ் ஊழியர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த கடிதத்தில் , வழங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விருப்ப ஓய்வு பெறுவதற்குத் தாங்கள் தீர்மானித்ததாகவும், அதற்கமைய தங்களின் வருங்கால வாழ்வாதார வழிகளைத் திட்டமிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், மறுசீரமைப்பு செயல்முறை நாளுக்கு நாள் தாமதமடைந்து வருவதால், தாங்கள் கடும் மன உளைச்சலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை மின்சார சபை கலைக்கப்படும் உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்படும் வரை, சபையிலிருந்து விலகித் தங்களது புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அத்திகதியை அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, மின்சக்தி மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் புபுது நிரோஷன் ஹெடிகல்லகே தனது பதவி விலகல் கடிதத்தின் மூலமும் அறிவித்துள்ளதை ஊழியர்கள் அந்தக் கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













