சாகோஸ் தீவுகளில் உள்ள டியாகோ கார்சியா தீவின் இறையாண்மையை மொரீஷியஸுக்கு விட்டுக்கொடுக்கும் பிரித்தானியாவின் ஒப்பந்தம் முட்டாள்தனமானதும், முழுமையான பலவீனமானதுமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (20) தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தீர்மானம் “கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டிய மிக நீண்ட தேசிய பாதுகாப்பு காரணங்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான அமெரிக்க முயற்சிகள் அதிகரித்துள்ள நிலையில் உலகப் பொருளாதார மன்ற வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று சுவிட்சர்லாந்தின் டாவோஸுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

டியாகோ கார்சியா தீவு, இந்தியப் பெருங்கடலில் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க-இங்கிலாந்து விமானத் தளத்தைக் கொண்டுள்ளது.
பிரித்தானியாவும் மொரீஷியஸும் கடந்த ஆண்டு சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
அதேநேரத்தில் பிரித்தானிய விமான தளத்தின் கட்டுப்பாட்டை நீண்டகால குத்தகையின் கீழ் தக்க வைத்துக் கொள்ள அனுமதித்தது.
இந்த ஒப்பந்தத்தை முன்னர் அமெரிக்க நிர்வாகம் ஆதரித்தது.
கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது, அந்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக வொஷிங்டன் கூறியதுடன், கூட்டு இராணுவ தளத்தின் நீண்டகால செயல்பாட்டைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.












