இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்று (22) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, தொடரின் முதல் போட்டியானது இன்று பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும்.
தொடரின் இரண்டாவது, மூன்றாவது போட்டிகள் முறையே ஜனவரி 24 மற்றும் ஜனவரி 27 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
ஒருநாள் தொடர் முடிந்ததும், இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும்.
இது அடுத்த மாதம் ஆரம்பாகவுள்ள ஐசிசி டி20 உலகக் கிண்ணத்துக்கான ஒரு பயிற்சி ஆட்டமாக இரு அணிகளுக்கும் அமையும்.
இங்கிலாந்து அணி தனது இறுதி ஒருநாள் தொடரை நியூஸிலாந்தில் கடந்த 2025 நவம்பர் மாதம் விளையாடியது.
இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணி, இங்கிலாந்தை 3:0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
அதே மாதத்தில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி 0-3 என தோல்வியடைந்தது.
எனவே, இரு அணிகளும் இந்த தொடரை புதிதாக தொடங்கி, தங்கள் தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முயல்வார்கள்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் போட்டிகளில் 79 முறை மோதியுள்ளன.
இலங்கை அணி 37 முறை வெற்றி பெற்றுள்ளது, இங்கிலாந்து அணி 38 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஒரு போட்டி சமனில் முடிந்தது, மூன்று போட்டிகள் எந்த முடிவும் எட்டவில்லை.
ESPNcricinfo தகவலின்படி, இலங்கை மண்ணில், இரு அணிகளும் 26 முறை மோதியுள்ளன.
இங்கிலாந்து 9 முறை வென்றுள்ள நிலையில், இலங்கை 16 முறை வெற்றி பெற்றுள்ளது.
ஒரு ஆட்டத்தில் எந்த முடிவும் எட்டவில்லை.
ஆர். பிரேமதாச மைதானத்தில், இரு அணிகளும் 10 முறை மோதியுள்ளன. இலங்கை 9-1 என்ற வெற்றி-தோல்வி சாதனையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.













