வீட்டு கழிவு நீரை வீதியில் செல்லும் வெள்ள வாய்க்காலுக்குள் விட்டவருக்கு 5ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை தென் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளரினால் வீட்டில் இருந்து வெளியேறும்
கழிவு நீரினை மழைநீர் வழிந்தோடுவதற்காக கட்டப்பட்ட பொது வாய்க்காலினுள் விடப்பட்டுள்ளது.
அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
அவ்முறைப்பாட்டிற்கு அமைவாக குறித்த நபர் இனங்காணப்பட்டு, அவரிற்கு எதிராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷ் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மன்றினால் 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.













