அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்தல் மற்றும் நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக்க பண்டார இன்று (30) தெளிவுபடுத்தினார்.
இதன்போது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் தற்போது பெருமளவில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக 25,000 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டிய 434,375 வீட்டு அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 423,914 வீட்டு அலகுகளுக்கு ஏற்கனவே உரிய நஷ்டஈட்டுத் தொகை வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அனர்த்தத்தால் சேதமடைந்த வீட்டுத் தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை மீளமைப்பதற்காக 50,000 ரூபா கொடுப்பனவை வழங்க 163,509 வீட்டு அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 115,757 வீட்டு அலகுகளுக்கு அக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஆலோக்க பண்டார தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு 15,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதாகவும், அதனின்கீழ் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 195,157 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், அவர்களில் 141,382 மாணவர்களுக்கு ஏற்கனவே 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் போது அதன் துல்லியத்தன்மையை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களைச் சரியாக அடையாளம் கண்டு நஷ்டஈடு வழங்கவும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் செயற்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இப்பணி மிகவும் கடினமானது என்பதால் ஏற்படும் தாமதங்கள் குறித்துக் குற்றம் சுமத்துவது பொருத்தமற்றது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சின் செயலாளர், இந்த நஷ்டஈடு வழங்கும் பணிகளை விரைவில் நிறைவு செய்ய அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் தெரிவித்தார்.













