அடிப்படை வசதிகளற்ற நிலையில் மிகவும் மோசமான குறைபாடுகளுடன் இயங்கிவரும் முல்லைத்தீவு – தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலைக்கு இன்று நேரடியாகச்சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
பாடசாலையின் நலன்விரும்பிகளின் முறைப்பாட்டிற்கு அமைவாக இவ்வாறு குறித்த பாடசாலைக்கு களவிஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பாடசாலையின் சுற்றுப்புறச்சூழலையும், வகுப்பறைக்கட்டடங்களையும் பார்வையிட்டதுடன், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், நலன்விரும்பிகளுடன் கலந்துரையாடி குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
அந்தவகையில் தரம் 01தொடக்கம் தரம்05வரையான வகுப்புக்களைக் கொண்ட குறித்த பாடசாலையில் 79மாணவர்கள் கவ்விகற்றுவருகின்றார்கள். இருப்பினும் கறித்தபாடசாலையின் சுற்றுப்புறச்சூழலும், வகுப்பறைக்கட்டடங்களும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுக்காணப்படுவதாக பாடசாலையின் நலன்விரும்பிக்கள் மற்றும் பெற்றோரால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக இப்பாடசாலையில் மிகவும் பழமையான வகுப்பறைக்கட்டடங்கள் வெடிப்புக்களுடனும், கரைகள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.















