உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இமய மலையில் அமைந்துள்ள இந்த புனிதத் தலங்கள் குளிர்காலத்தில் மூடப்பட்டிருக்கும். கோடை காலத்தில் 4 கோயில்களின் நடைகளும் திறக்கப்படும்.
இந்த சூழலில் வரும் ஏப்ரல் 22ம் திகதி காலை 8 மணிக்கு கேதார்நாத் கோயில் நடை திறக்கப்படுகிறது. ஏப்ரல் 23ம் திகதி பத்ரிநாத் கோயில், ஏப்ரல் 19ம் திகதி கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
இது குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: ஏப்ரல் 22ம் திகதி கேதார்நாத் கோயில் நடை திறக்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பகவான் சிவனை வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு தெய்வ பூமிக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்
















