இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் தாக்குதல், துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளதாக அண்மைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சுகாதார சேவையின் 2025 ஆம் ஆண்டுக்கான இந்த கணக்கெடுப்பில், ஊழியர்களில் ஏழு நபர்களில் ஒருவர் நோயாளிகள் அல்லது பொது மக்களிடம் இருந்து இந்த வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அவர்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தாம் எதிர்கொண்ட துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கை தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளனர் – இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகுந்த உயர்ந்த எண்ணிக்கையாகும் என்றும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை குறிப்பிட்டுள்ளது.
இது தவிர ஊழியர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளும் சாதனை அளவை எட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தேசிய சுகாதார சேவை ஊழியர்களில் சுமார் 10 நபர்களில் ஒருவர், அம்பியூலன்ஸ் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர், தாதியர்கள் மற்றும் மகப்பேறு உதவியாளர்களில் 10 நபர்களில் ஒருவரும் கடந்த ஆண்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் வரையிலான மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகள் சுமார் 300,000 உடல் ரீதியான வன்முறை சம்பவங்களையும் 50,000 பாலியல் தீங்கு சம்பவங்களையும் கண்டறிந்ததாக அண்மையில் கார்டியன் செய்திச் சேவை வெளிப்படுத்தியதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.













