இங்கிலாந்து துறைமுகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஒரு முக்கிய போதைப்பொருள் நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சுமார் ஒரு தொன் எடையுள்ள கொக்கைய்ன் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் பெறுமதி சுமார் 80 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று எசெக்ஸில் உள்ள லண்டன் கேட்வே துறைமுகத்தில் இந்தப் பறிமுதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருவதை தேசிய குற்றவியல் முகமை உறுதி செய்துள்ளது.
பனாமாவிலிருந்து வந்த ஒரு சரக்குக் கொள்கலனில் இருந்த சிறிய பைகளுக்குள் இந்தப் போதைப்பொருட்கள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கொக்கைய்ன் போதைப்பொருள் இங்கிலாந்தில் கலப்படம் செய்யப்பட்டு விற்கப்பட்டிருந்தால், அதன் தெரு மதிப்பு சுமார் 80 மில்லியன் பவுண்டுகளாக இருந்திருக்கும் என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இங்கிலாந்தில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு சம்பவங்கள் சாதனை அளவை எட்டியுள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தும் வேளையில் இந்தப் பறிமுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், போதைப்பொருள் கும்பல்களைக் குறிவைத்து நாடளாவிய ரீதியில் ஒரு வாரம் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது, 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 10 சதவீதமானோர் சிறுவர்கள் – அவர்களில் சிலர் 14 வயதுடையவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.













