பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் அயர்லாந்து திருச்சபை ஊழியர் ஒருவர் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை அயர்லாந்து திருச்சபை (Church of Ireland) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பல கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் அவர் நிபந்தனைப் பிணையில் (Bail) விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, திருச்சபை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ( 15) கவுண்டி டவுனில் உள்ள மொய்ரா (Moira) பகுதியில் வைத்து குறித்த நபர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் உத்தியோகபூர்வமாகப் புகார் ஒன்று அளிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதேவேளை, பொலிஸாரின் இந்த உத்தியோகபூர்வ விசாரணைகளின் முடிவுகள் வெளியாகும் வரை, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஊழியர் திருச்சபையின் எந்தவொரு பணிகளிலும் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார் என அயர்லாந்து திருச்சபையின் ஊடகப் பிரிவு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.













