யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பூனேவா (Poonewa) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 56 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இன்று (18) காலை இவ்விபத்து ஏற்பட்டது.
மோதலின் பின்னர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் பேருந்தின் பின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பூனேவாவில் உள்ள கல்கண்டேகம (Galkandegama) பகுதியில் அமைந்துள்ள பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பூனேவா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















